முஸ்லிம்கள் அவ்வப்போது தங்களின் தேசப்பற்றை நிரூபிக்கத் தள்ளப்படுவதைப் போல, இன்று பெரியார் பற்றைக் காட்ட வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
பி.ஜெ. ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதி அல்ல. அவர் மீதான அண்மைக்கால வெறுப்பு முஸ்லிம் சமூகத்தில் அதிகமாகவே உருவாகியிருக்கிறது. இளைஞர்கள் தவ்ஹீத் ஜமாத்தைவிட, தேர்தல் அரசியலில் பிரதானமாக இருக்கும் அமைப்புகளிலும், அதன் கட்சிகளிலும்தான் இன்றைக்கு அதிகமாக உள்ளனர். ஜெயலலிதா இருந்தபோது தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்திச் சொல்லியது, அரசியல் ஆதாயமே அன்று உண்மையல்ல. பி.ஜெ. எடுக்கும் அரசியல் மற்றும் ஆன்மீக நிலைப்பாடுகள் முஸ்லிம்களின் மத்தியில் பெருமளவில் வெறுப்பையே நிகழ்த்தியிருக்கிறது. அதே ரீதியில்தான் பெரியார் குறித்து என்றைக்கோ அவர் பேசிய கருத்திற்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் கடுகளவுகூட உடன்பாடு கிடையாது.
இருந்தாலும் பி.ஜெ. என்றைக்கோ பேசிய ஒன்றை, இன்றுள்ள சூழலில் சிலர் வெளியிட்டு வைரலாக்குகிறார்கள் எனில், அது யார் வேலை என்பது நன்றாக அறிந்த ஒன்றே. ஒரு சிறிய கோட்டிற்கு அருகே, பெரிய கோட்டை வரைந்து எச். ராஜா கும்பல் தப்பிக்கிறது. இதைவைத்து ஷோ கால்ட் பெரியாரிஸ்டுகள் பி.ஜெ.வைத் தாக்குவதை விட்டுவிட்டு 'முஸ்லிம்கள்' என்று பொத்தாம் பொதுவாகத் திட்டுவது வேடிக்கையாக உள்ளது. பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், தெஹ்லான் பாக்கவி, தமிமுன் அன்சாரி, ஆளூர் ஷாநவாஸ் போன்றவர்களெல்லாம் பொதுவெளியில் பெரியார் சிலைக்கு ஆதரவாய் குரல் கொடுத்தது, கொடுத்துக்கொண்டிருப்பது யார் கண்ணிற்கும் தெரியவில்லையா?
பி.ஜெ.வை எதிர்க்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. எதிர்ப்பை பி.ஜெ.வோடும், அவரது அமைப்போடு நிறுத்திக்கொள்ளுங்கள். பொத்தாம் பொதுவாக முஸ்லிம்கள் என்று பதிவிட்டு காயத்தை ஏற்படுத்தாதீர்கள். வேண்டுமென்றால் பி.ஜெ.வை எதிர்த்து, எச்.ராஜாவிற்கு நிகழ்த்திய அதே எதிர்ப்பை நிகழ்த்துங்கள். பெரும்பான்மை முஸ்லிம்கள் துணை நிற்போம். பிரதான முஸ்லிம் அமைப்புகள் உடன் வருவார்கள்.
பெரியாருக்கும் தமிழ் முஸ்லிம்களுக்குமான பந்தம் ஆழமானது. கோட்பாட்டு ரீதியானது.
-பழனி ஷஹான்

