இஸ்லாம் உருவாக்கிய எதுவும் ஒரு அடிப்படை நோக்கம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக நடைபெறுவது இல்லை. இறைவனின் மீது அளப்பெரும் அன்புகொண்டு அவனது காதலில் மூழ்கியவர்களை இறைநேசர்கள் என்று கூறுவர். இவர்கள் தம் இறைக்காதலை அதிகப்படுத்துவதற்கும் அதில் இன்பம் காண்பதற்கும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.
அவற்றில் ஒன்றுதான் கவி வடிவில் ராகத்துடன் இறைவனின் அருமை பெருமைகளையும், அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பையும், இறைநேசர்கள் அன்பையும், இறைவனை அவர்கள் போற்றி புகழ்ந்து பாடுவதன் மூலம் இறையன்பின் தாகத்தை அதிகரித்துக்கொள்ளும் முறையாகும். அந்த வகையில் இறையன்பையும், இறைக்காதலையும் மெருகேற்றுவதற்காக அந்த இன்பத்தில் சொக்கி லயிப்பதற்காக உருவாக்கப்பட்ட கலைக்கு “சமா” என்று சொல்லப்படும்.
சமா என்ற அரபி வார்த்தையின் சரியான உச்சரிப்பு ‘சிமாஃ’ ஆகும். அதற்குக் ‘காதால் கேட்பது’ என்று பொருள். ‘பாடப்படும் கவிகளைக் காதால் கேட்பது’ என்ற அடிப்படையில் இப்பெயர் உருவானது. கவ்வாலி என்பது கவ்ல் என்ற அரபி வார்த்தையிலிருந்து பெறப்பட்ட சொல். கவ்ல் என்றால் “சொல்” என்பதாகும். கவ்வால் என்றால் ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்வதாகும். “சமா” வில் உருக்கமான சில வார்த்தைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதால் இக்கலை ‘கவ்வாலி’ என்று மக்கள் புழக்கத்தில் சொல்லப்படுகிறது.
நடைமுறையில் நாம் பார்த்தால் இரண்டு மணி நேரம் உபதேசத்தில் ஏற்படாத உணர்ச்சிப்பெருக்கு இரண்டு வரிக் கவிதையில் ஏற்பட்டு விடுகிறது. உதாரணமாக இசைமுரசு நாகூர் ஹனீபாவின் இஸ்லாமிய பாடல்கள் இஸ்லாமியர்களிடம் மட்டும் அல்ல மாற்றார்களின் உள்ளத்திலும் கூட இஸ்லாத்தைப் பற்றிய ஈர்ப்பையும் அல்லாஹ்வின் அறிமுகத்தையும், முஸ்லிம்களின் மாண்பையும், மதநல்லிணக்கத்தையும் முஸ்லிம்கள் மீது உயர்ந்த மரியாதையையும் ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் பாத்திமா என்பது கூட நமது இன்றைய மெத்தப் படித்த, மேக்கப் அடித்த இளம் மங்கைகளுக்குத் தெரியாமல் போனதற்குக் காரணம் “பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா” என்ற பாடல்கள் இல்லங்கள் தோறும் ஒலிக்காததே. பெருகி வரும் விவாகரத்துகளுக்குக் காரணம் “தீன்குலக் கண்ணு” பாடலை நாம் மறந்ததே.
ஆன்மீகம் மனித வாழ்வின் மிக முக்கியமான ஓர் அங்கம். ஆனால் அது மக்களிடம் மார்க்கத்திற்கு முரணானதாக பார்க்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்று இறைநேசர்கள் தூய நோக்கோடு ஏற்படுத்திய ஸமா, கவ்வாலி தவறான நடைமுறையில் இன்று நடத்தப்படுவதால் தான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலந்தொட்டு அரபுலகின் பாரம்பரியமிக்க தப், கஞ்சீரா போன்ற இசைக் கருவிகளால் இறைஞானக் கவிகள், நபிகள் நாயகத்தின் மாண்புகள், ஸஹாபாக்கள், நல்லோர்களின் பண்புகள் பற்றியெல்லாம் பாடப்பட்டது. ஸஹாபிகளில் அப்துல்லாஹ் பின் ஜாபிர், அப்துல்லாஹ் பின் ஜுபைர், முஆவியா ஆகியோரும், அதற்குப் பின் வந்தவர்களில் ஜுனைதுல் பக்தாதி, சிர்ரி சிக்தி, துன்னூன் மிஸ்ரி போன்ற தவசீலர்களும் இதைத் தொடர்ந்து ஸமாவைக் கேட்டு வந்தனர் என்று வையகம் போற்றும் அறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி அவர்கள் ‘இஹ்யா உலூமித் தீன்’ என்னும் கிரந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
காலங்களும் கலாச்சாரங்களும் மாற மாற ஆன்மீக நாதர்களான சூபி மகான்கள் எங்கெல்லாம் உருவாகி மக்களை ஆன்மீக வழி நடத்தினார்களோ அந்தந்த மாநிலங்கள், நாடுகளுக்குட்பட்ட பாரம்பரிய இசைக் கருவிகள் மூலம் ‘ஸமா’ என்னும் கலை உருவெடுத்தது. இறைக் காதலில் மூழ்கியிருக்கும் இறைநேசர்கள் எனப்படும் ஆன்மீக நாதாக்கள் ஸமாவின் மூலம் இறைக்காதலை அதிகப்படுத்திக் கொண்டு தங்கள் இறைவனுடனான நெருக்கத்தை இன்னும் வீரியப்படுத்திக் கொண்டனர்.
உலகப் புகழ் காவியமான ‘மஸ்னவி ஷெரீபை’ எழுதிய மாபெரும் அறிஞர் மற்றும் சூபி ஞானியான மௌலானா ஜலாலுதீன் ரூமி அவர்கள் தெருவோரம் நடந்து செல்கையில் பொற்கொல்லன் நகைகள் செய்ய தங்கத்தின் மீது ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். இறைசிந்தனையில் நடந்து சென்று கொண்டிருந்த ரூமிக்கு அதன் சப்தம் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற ஓரிறைக் கொள்கையை ஒலிக்கும் அரபி வார்த்தையாகக் காதில் விழவே, இறை சிந்தனையில் இருந்தவர்கள் உடனே இறைக்காதல் வயப்பட்டு தன்னிலை மறந்து சுற்ற ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் உலகில் சமா என்னும் கவிக் கலை, ‘சூபி இசைக் கலையாக’ பரிணாமிக்கக் காரணம்.
அன்றிலிருந்து இறைக்காதலில் மூழ்கியிருக்கும் இறைநேசர்கள் எனப்படும் ஆன்மீக நாதாக்கள் ஸமாவை இசையுடன் சேர்த்து நிகழ்த்தி அதன் மூலம் இறைக்காதலை அதிகப்படுத்திக் கொண்டு தங்கள் இறைவனுடனான நெருக்கத்தை இன்னும் வீரியப்படுத்திக் கொண்டனர்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் இசைப் பாரம்பரியம் என்பது மிகவும் தொன்மையானது. அதிலும் குறிப்பாக வட இந்தியர்கள் அதிகம் இசையை விரும்புபவர்கள். பல இலட்சம் மக்களை சத்திய இஸ்லாத்தின் பால் ஈர்த்த இந்தியத் துணைக்கண்டத்தின் மாபெரும் ஞானியான காஜா முயீனுத்தீன் சிஸ்தி அவர்கள் அதிகமாக ஸமாவைப் பிரியப்படுவார்கள். காரணம் அவர்களால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் இசை சார்ந்த சமூகத்தில், சூழலில் வளர்ந்தவர்கள். இசையை அவர்களை விட்டும் பிரிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.
‘இரண்டு சோதனைகள் உங்களை வந்தடைந்தால் அதில் லேசானதை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள் நபிகள் நாயகம். அதனடிப்படையில் உலக இன்பங்கள் பக்கம் ஈர்த்து உள்ளங்களை நாசமடையச் செய்யும் இந்திய இசைகளை விட இறைவனின் பக்கம் சிந்தனையைத் தூண்டும் ‘ஸமா’, மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது. அறியாமைக் காலத்தில் கடுங்கோபக்காரராக இருந்த இஸ்லாத்தின் இரண்டாம் கலீபா உமர் அவர்கள் இஸ்லாத்தை தழுவிய பின் அவர்களது கோபகுணத்தை மாற்றாமல் அதையே இஸ்லாத்திற்கு முரணான காரியங்களை முடக்குவதற்கான மாற்று சக்தியாக மாற்றினார்கள். இசையுடன் ஒன்றி வாழ்ந்தவர்களை அந்த இசையே, இஸ்லாமிய மார்க்கப் பற்றையும், இறை நெருக்கத்தையும் தரவல்ல ஓர் அற்புத சக்தியாக உருவாக்கினார்கள் ஹஸ்ரத் காஜா முயீனுதீன் சிஸ்தி அவர்கள்.
அதற்குப் பிறகு அவர்களது ஆன்மீகத் தொடரில் வந்த டெல்லியின் ஆன்மீக குருநாதர் நிசாமுதீன் மஹபூபே இலாஹி அவர்கள் டெல்லியில் இஸ்லாத்தை பரப்பி வருகையில் ஸமாவின் மூலம் மக்களுக்கு இறைஞானத்தை புகட்டினார்கள். பின்னர் அவர்களின் உற்ற சீடரான அமீர் குஸ்ரூவின் மூலம் ஸமா வளர்ச்சியடைந்தது. இந்தியாவில் பரவலாக இந்த சூபி இசைக்கலை சென்றடையக் காரணமானவர்கள். ஸமா என்னும் கவ்வாலி பற்றி விவரிக்கும் போது இவர்களது வரலாறைக் கொஞ்சம் புரட்டுவது தலைப்பிற்குத் தோதுவாக இருக்கும்.
அபுல் ஹசன் யாமீனுதீன் குஸ்ரூ - கி.பி. 12ம் நூற்றாண்டின் இந்தியத் துணைக்கண்டத்தின் சிறந்த அறிஞர், கவிப் புலமையில் கைதேர்ந்தவர். அரபி, உருது, பார்சி, போன்ற பன்மொழி வித்தகர். ‘கஜல்’ என்னும் காதல் (காதல் என்றவுடன் இன்றைய பாலினக் காதலை நினைக்கவேண்டாம். அக்காலத்தில் காதல் என்பதன் நோக்கம் பெரும்பாலும் இறைக்காதலாகவே இருக்கும்) கவிதை முறையை உருவாக்கியவர்.
தனது இளம் வயதிலேயே தனது கவித் திறமையால் மாலிக் அரசர்களிடம் பிரசித்திப் பெற்று அரசவைக் கவிஞரானார். அதற்குப் பிறகு கில்ஜி சாம்ராஜ்யம், துக்ளக் சாம்ராஜ்யம் என டெல்லியை ஆண்டப் பல அரசர்களிடம் செல்வாக்குப் பெற்று கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக அவர்களிடம் செல்வாக்குப் பெற்றார். சாம்ராஜ்யங்கள் மூன்று மாறினாலும் க்ஹுஸ்ரோவின் செல்வாக்கு சரியவில்லை. வெறும் குஸ்ரூவின் ‘அமீர் குஸ்ரூ’வாக மாறினார். ‘இந்தியாவின் கிளி’ என்றும், ‘கவ்வாலியின் தந்தை’ எனவும் போற்றப்படும் குஸ்ரூ, கி.பி. 1310ல் நிஜாமுத்தீன் அவ்லியா அவர்களின் நெருக்கம் கிடைத்தது. தனது குருநாதர் மேல் அளவுகடந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார்கள். அதுவரை அரசர்களை சிந்தனையில் வைத்துப் புகழ்ந்த அத்தனைக் கவிதைகளையும் இப்போது சர்வலோகச் சக்கரவர்த்தியான இறைவனின் சிந்தனைகளோடு சேர்த்துப் பார்த்ததால் மாபெரும் ஞானியாகவும் மாறினார்கள்.
இவ்வாறு இறைஞானத்தை அதிகரிப்பதற்காக ஆன்மீக குருநாதர்களால் முறைப்படுத்தப்பட்ட ஸமா என்னும் கவ்வாலி, இன்று மக்கள் மத்தியில் தவறானப் புரிந்தல்களோடு உலாவருகிறது. உள்ளத்தைக் கெடுக்கும் இன்றைய நவீன இசையையும் ஸமாவையும் ஒப்பீடு செய்கிறார்கள். இக்காலத்தில் ஸமாவைப் பற்றிய அடிப்படை நோக்கம் தெரியாமல் மக்கள் அதை அணுகுகின்றனர். அமீர் குஸ்ரூ போன்ற சிலரின் பரிசுத்த இறைஞானப் பாடல்கள் சினிமாவில் உருது, ஹிந்தி திரைப்படங்களில் பிரபலப்படுத்தி மோகம் உச்சத்தில் இருக்கும் இன்றைய நிலையில் கீழ்தரமானப் பாலினக் காதலுக்கு உவமையாக்கப்பட்டு அதன் பரிசுத்த நோக்கத்தைப் பாழ்ப்படுத்தி வருகின்றனர்.
19ஆம் நூற்றாண்டில், சாபிரி சகோதரர்கள் பல்வேறு சூபிக் கவ்வாலிப் பாடல்களை பாடியுள்ளார்கள். 20ஆம் நூற்றாண்டில் கவ்வாலிப் பாடகராக புகழப்படும் நுஸ்ரத் பதேஹ் அலி கான் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் போன்றோரின் பாடல்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றாலும், எப்போது அதன் அடிப்படை நோக்கம் தவறிவிட்டதோ அப்போதே அதை சூபிக் கலையாக உருவகப்படுத்த முடியாது. இதுபோன்ற கவ்வாலிப் பாடல்கள் முழுவதுமாக சிதைந்து வெறும் ஆடல் பாடல் கேலிக் கூத்துக்காக நடத்தப்படுகிறது. இவர்களின் பாடல்களை சினிமா சார்ந்த கவ்வாலியாக வைத்துக்கொள்ளலாமே தவிர சூபிக் கவ்வாலியாக அதைப் பார்க்க மட்டுமல்ல அவைகளோடு ஒப்பிடவும் கூட தகுதி இல்லாதவைகள்.
ஸமா, கவ்வாலி என்பது பொத்தாம் பொதுவாக எல்லோரும் சாதாரணமாக மற்ற பாடல்களை போல கேட்பது என்பது முதலில் தவறானது. இசைப் பற்றிய பல முரணானக் கருத்துக்கள் மார்க்கத்தில் இருக்கையில், இமாம் கஸ்ஸாலி அவர்கள் ஸமாவைப் பற்றி வெறும் அது ஒரு சூபி இசை என்று மட்டும் சொல்லாமல், எந்த அடிப்படையில் அது கூடும் அதை கேட்பது யாருக்கு ஆகுமானது, எந்த இடத்தில், எந்த நிலையில் அது நிகழ்த்தப்படவேண்டும், அதைப் படிப்பவர் எந்த நோக்கத்தோடு படிக்க வேண்டும், கேட்பவர் எந்த மனநிலையோடு இருக்க வேண்டும், யார் முன்னிலையில் அது நடக்க வேண்டும், யாரெல்லாம் அதைக் கேட்கத் தடை என மிகத் தெளிவான விவரங்களைப் பதிவு செய்துள்ளார்கள்.
ஸமா, கவ்வாலி என்பது முதலில் இறைக்காதலை அதிகப்படுத்துவதற்காகவே நடத்தப்பட வேண்டும். அந்த நோக்கத்தில்தான் பாடப்பட வேண்டும். ஸமா நடக்கும் சபையில் ஒரு இறைஞானி முன்னிலை வகிக்க வேண்டும். அதில் கூடியிருக்கும் மக்கள் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட மக்களாக இருக்க வேண்டும். வெறும் பொழுதுப் போக்கிற்கு, காதிற்கு இதமாக மனதிற்குப் பிடித்ததாக இருப்பதற்காகக் கேட்கக்கூடாது. ஆண், பெண் இருபாலர்களும் சபையில் கலந்திருக்கக் கூடாது. மங்கைகள் பாடக்கூடாது. மதுபானங்கள் இருக்கக் கூடாது என்பது போன்ற பல்வேறு ஸமாவின் வரைமுறைகளைக் கூறியுள்ளார்கள்.
ஸமாவின் இடையில் ‘வஜ்த்’ என்னும் நிலை ஏற்படும். அது இறைக்காதல் மிகுதியால் மெய்மறந்து ஆடுதல் ஆகும். அது இன்றைய நவீன ஆடல் போன்றது இல்லை. அதையும் இன்று கவ்வாலியில் கைகளைத் தட்டி ஆட்டம் போடுவது என்று செயற்கையான ஆடல்களால் உவமைப்படுத்துகின்றனர்.
நல்லோர்களின் நினைவு கூட்டங்களில் ஸமா, கவ்வாலி என்ற பெயரில் ஒரு சடங்காக, குதூகலத்திற்காகவே வரைமுறையின்றி நடத்துவது, ஆண்களையும் பெண்களையும் ஒரே மேடையில் ஏற்றி போட்டாப் போட்டி கவ்வாலி நடத்துவது, அதைப் பார்ப்போரும் கேட்போரும் இறைச்சிந்தனையின்றி மற்ற பாடல்கள் போல ஆராவாரம் செய்து அதைக் கேளிக்கை ஆக்குவது என்பது மிகவும் தவறான செயல்களாகும்.
சூபி மகான்களின் புனித அடக்கஸ்தலங்களில் பாடப்படுவதால் மட்டுமே அது சூபிக் கவ்வாலியாக ஆகிவிடாது. அவர்கள் வாழும் காலத்தில் எந்த நோக்கத்தில் அதை ஏற்படுத்தினார்களோ, அந்த நோக்கத்தையும், வரைமுறைகளையும் வருங்காலத்தில் நாம் பின்பற்ற வேண்டும். ஆன்மீகம் பற்றிய தெளிவான ஞானம் இல்லாத நம் இளைஞர்களுக்கு ஆன்மீகத்தைப் பற்றிய அறிவை ஊட்டும் நிகழ்வுகளாக அவைகள் மாற்றப்படவேண்டும். இறைஞானிகள் உருவாக்கிய அற்புதமான இந்த ஸமா, கவ்வாலி என்னும் சரியான முறையில் அணுகி இறைநெருக்கத்தைப் பெற்று மனத்தூய்மையுடன் வாழும் நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

