- அ. தமீம் அன்சாரி
வி.சி.கவை பொறுத்த வரை அது தலித்களுக்கான கட்சி என்று மட்டுமே பேசப்பட்ட நிலையில், திருமாவளவன் அதை மாற்றியமைத்தார். வி.சி.க தலித்களுக்கு மட்டுமான கட்சியல்ல. ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டோருக்கான கட்சி என்று முஸ்லிம்களையும் பிற சிறுபான்மையினர்களையும் சேர்த்துக் கொண்டார். திருமாவளவனின் அரசியல் பார்வை விசாலமானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை மீட்டெடுப்பதையும் தமிழ் தேசியத்தையும் முக்கியமாக வைத்து அரசியல் செய்துக் கொண்டிருந்த திருமாவளவன், ஒரு கட்டத்தில் தொலை நோக்கு பார்வைக் கொண்ட அரசியலை கையிலெடுத்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில் இருக்கும் பிரிவினைகளை உணர்ந்து அதை கையிலெடுத்து சரிசெய்தார். தலித்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் பிரிவை ஏற்படுத்த பாசிச அரசுகள் செய்த சூழ்ச்சிகளை புரிந்து, ஒரு குடையின் கீழ் அனைவரையும் ஒன்று சேர்த்தார்.
கடந்த கால வரலாற்றை எடுத்து பார்க்கும் போது தமிழகத்தில் நடந்த முக்கிய சம்பவங்கள் அனைத்திலும் திருமாவளவனின் குரல் முதல் குரலாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. ஸ்வாதியின் கொலையில் உள்ள மர்மங்கள் இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. அந்த மர்மங்களை கண்டுபிடித்துவிட்டால் முதலமைச்சரின் மரணத்திற்கான மர்மங்களும் வெளியில் வந்துவிடும் என்று பொதுத் தளத்தில் பேசுகிறார்கள்.
ஸ்வாதியின் கொலை வழக்கில் ஒரு முஸ்லிம்தான் கொன்றார். அதுவும் அவர் பெயர் மாலிக் என்று பிரபலங்கள் அதை திசை திருப்ப முயன்ற போது, திருமாவளவன் தான் ஸ்வாதியின் கொலைக்கான பின்னணியில் இருந்த உண்மையான விஷயங்களை பொது விவாதத்திற்கு கொண்டு வந்தார். அதற்கு பிறகு தான் வழக்கின் போக்கு மாறியது. முக்கியக் கட்சி தலைவர்கள் பலரும் ஸ்வாதி விஷயத்தில் வாய் திறக்கவில்லை. ஆனால் எதிர்ப்புக் குரல் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் ஆராயப்பட வேண்டிய முக்கிய விஷயங்களை பொது ஊடகத்தில் போட்டு உடைத்தது திருமாவளவன் மட்டும் தான்.
மெரீனா போராட்டம் முடிந்த போது ஏற்பட்ட கலவரத்தில் காவல் துறையின் வன்முறையை எதிர்த்து முதலில் களமிறங்கி போராடியவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். திருமாவளவன் நேரடியாக தெருவில் இறங்கி போராடினார். கலவரத்தின் உள்நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தலித் சமூகத்தைச் சார்ந்த நந்தினிக்கு நியாயம் கேட்டு முதல் குரல் கொடுத்தவர் தொல்.திருமாவளவன்.
ஒட்டுமொத்த இந்தியாவும் அரசியல் தலைவர்களும் அப்துல் கலாம் மறைவையொட்டி அவருக்கான இறுதி அஞ்சலியை பார்த்துக் கொண்டிருந்தபோது அதே நாளில் இன்னொரு புறம் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனை மறந்துவிட்டார்கள். “இந்தியாவின் மனசாட்சியை உலுக்கும் வகையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அதுவும் அவரது பிறந்த நாளில், மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை அடக்கம் செய்யும் நாளில் நீதியின் பெயரால் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்று முழங்கினார் திருமா.
வேலூர் ஷகீல் அஹ்மத், தர்மபுரி கலவரம் முதல் கௌரி லங்கேஷ் கொலை, தாஜ்மஹால் பிரச்னை, மெர்சல் சர்ச்சை வரை அனைத்திலும் கண்டனம் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் பிரச்சினையின் உண்மையான காரணத்தை பொதுத் தளத்தில் பதிவு செய்து மக்களின் கவனத்திற்கு கொண்டு வருபவர் திருமா.
ஒரு முறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேசும்போது தொண்டர்களுக்கு அவர் அறிவுரை சொல்கிறார்: “நீங்கள் அனைவரும் மேடைகளில் பேசும் போது ஏனோ தானோவென்று எதிரியை அவன் இவன் என்று திட்டி பேசாதீர்கள். கொள்கைச் சார்ந்த அறிவோடு எதிரியை எதிர்க்கொள்ளுங்கள்” என்று அறிவுரை சொல்கிறார்.
திருமாவளவனின் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அனைத்து முடிவுகளுக்கு பின்னாலும் ஒரு வரலாறு, கொள்கை என்று தக்க காரணங்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ் தேசியத்தை வலியுறுத்துபவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். ஆனால் தமிழ் தேசியத்தை முதன்மையாக வைத்து அரசியல் செய்யும் திருமாவளவன் திராவிடத்தையும் திராவிடக் கட்சிகளையும் பிரித்துப் பார்க்கிறார். திராவிடக் கட்சிகளோடும் கட்சி சார்ந்த கொள்கைகளோடும் திருமாவளவனுக்கு விமர்சனம் இருக்கிறது. ஆனால் சமூகநீதியை கொண்டு வந்த திராவிடத்தோடு அவருக்கு விமர்சனம் இல்லை. பெரும்பான்மையானவர்களின் திராவிடம் பெரியாரோடு முடிந்துவிடும். திராவிடத்தின் கடைசி எல்லை பெரியார்தான். ஆனால் திருமாவளவன் திராவிடத்தை அயோத்தி தாசரிலிருந்து பார்க்கிறார். ஆனால் பெரியாரின் திராவிடத்தை எடுத்துக் கொள்கிறார்.
தொடர்ந்து தமிழகத்தில் ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அந்தப் பிரச்சினைகள் குறித்து திருமாவளவனின் தலைமையிலான வி.சி.கவின் அறிக்கை கவனிக்கத்தக்கது. அந்தப் பிரச்சினை சார்ந்து வி.சி.கவின் நிலைபாடு. கொள்கை அடிப்படையிலும் வரலாற்று அடிப்படையிலும் அந்த நிலைபாடு இருக்கும். பின்னொரு நாளில் அந்த நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டால் அதற்கும் கொள்கை சார்ந்த தக்க காரணங்கள் இருக்கும்.
ஏனைய கட்சிகளும் தலைவர்களும் இருந்தாலும் கூட தலித்கள் வி.சி.கவையும் திருமாவளவனையும் தான் தங்களுடைய தலைமையாக பார்க்கிறார்கள்; காரணம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும்போதெல்லாம் களத்திற்கு சென்று குரல் கொடுத்தார் திருமாவளவன்.
சட்டப்படி அந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு காண வேண்டுமோ அதற்கான வழிகளை ஏற்படுத்தி கொடுத்தார். கண்டனங்கள் அறிக்கைளோடு நின்றுவிடாமல் தொடர்ந்து அடுத்தடுத்து இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சிறுபான்மையினர்களின் பிரச்சினையை திருமாவளவன் எடுத்து பேசுகிறார். இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் அவரை நோக்கி செல்கிறார்கள். இதைப் புரிந்துக் கொண்ட சங்கப்பரிவார அமைப்புகள், வி.சி.கவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் ஊடுருவி விட்டார்கள். விரைவில் திருமாவளவனை அவர்களிடமிருந்து மீட்போம் என்கிறார்கள்.
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் திருமாவளவனை இழுத்துப் பிடித்திருக்கவில்லை. திருமாவளவனின் அரசியல் சிறுபான்மையினர்களை இழுத்துச் சென்று அங்கே விட்டிருக்கிறது. இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லக் கூடியவரா திருமாவளவன்? ஒரு வேளை இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் திருமாவளவனை விட்டு விலகினாலும் கூட திருமாவளவன் அவர்களை விட்டு விலகமாட்டார். அவர்களுக்கான அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பார்.
என்றும் சாமானிய மக்களின் குரலாய் ஒலிக்கும் திருமா அவர்களின் அரசியல், மக்களும் பிற கட்சிகளும் கவனிக்க வேண்டியவை.


