எனது எதிர்வீட்டில் குடியிருந்தவர் எல்லப்பன் என்கிற வயதான பெட்டிக் கடைக்காரர்.
அவர் காங்கிரஸ் கட்சியின் வட்ட நிர்வாகியாக இருந்தவர். பெரிய அளவில் அவரோடு பழக்கமில்லாவிட்டாலும்
அவ்வப்போது பார்த்துக் கொள்வது உண்டு.
வீட்டிலிருந்தபடியே வாசல் வழியாக பார்த்தால் சாலையில் செல்லும் வண்டிகள் தெரியும்.
சாலைக்கு அந்தப் பக்கம் எல்லப்பன் தாத்தா கடையில் அமர்ந்திருப்பதும் தெரியும். அதே
போன்று ஒருநாள் வேடிக்கை பார்த்துக் கொண்டே நாகூர் ஹனீபா அவர்களின் பாட்டை போட்டு கேட்டுக்
கொண்டிருந்தேன். பாடல் காற்று வழியாக எல்லப்பன் தாத்தா காதில் விழுந்தவுடன் எங்கிருந்து
பாடல் ஒலி கேட்கிறதென்று நிமிர்ந்து என் வீட்டை பார்த்தார். என் வீட்டிலிருந்துதான்
கேட்கிறது என்று உறுதியானவுடன் வேக வேகமாக சாலையைக் கடந்து என் வீட்டிற்குள் நுழைந்து
அறைக்கு வந்துவிட்டார்.
நான் என்னவாயிற்றோ என்று குழப்பத்தில் “என்னாச்சு தாத்தா?” என்று கேட்டேன். உடனே அவர்
இது நாகூர் ஹனீபா பாடல் தானே என்று கேட்டுவிட்டு அந்தப் பாட்டோடு சேர்ந்து இவரும் பாட
ஆரம்பித்தார். பாடலின் கடைசியில் அரபி வாசகமான “ஸல்லல்லாஹு அலா முஹம்மது.. ” என்ற துதியை முழுவதுமாக
எந்தப் பிழையுமின்றி அப்படியே பாடி முடித்தார். பாடிவிட்டு சொன்னார்: எவ்வளவு பெரிய
பாடகர். நானெல்லாம் நாகூர் ஹனீபாவின் தீவிர ரசிகன் என்றார். அப்போது தான் எனக்கு புரிந்தது, கலையின் முக்கியத்துவம். ஆன்மீகத்தை மட்டுமல்ல திராவிடக்
கொள்கையையும் தனது கம்பீர குரலைக் கொண்டு கலை வடிவில் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
நாகூர் ஹனீபா பாடிய “இந்தியா எங்கள் தாய்நாடு, இஸ்லாம் எங்கள் வழிபாடு. தமிழே எங்கள் மொழியாகும் சன்மார்க்கம்
எங்கள் வழியாகும். யாரடா சொன்னது எமை அந்நியன் என்று யாரடா சொன்னது” என்ற பாடல் இன்றும் பாசிஸ்டுகளுக்கு
தக்க பதிலடியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. நாம் பல நூறு மாநாடுகள் நடத்தி பல மணிநேரம்
பிரச்சாரங்கள் செய்தாலும் இந்த ஒரு பாடலுக்கு ஈடாகாது; அந்தப் பிரச்சாரங்களைவிட இந்த பாடலுக்கு வீரியம் அதிகம். நாகூர் ஹனீபா இறந்துவிட்டார்.
ஆனால் அவரது பாடல் இன்றும் பாசிஸ்டுகளுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறதென்றால்
அதுதான் கலையின் பலம்.
ஊடகம் என்பது ஒரு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. அதில் எழுத்து, இசை, புகைப்படம், நாடகம், ஆவணப்படம், குறும்படம், திரைப்படம் என்று பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த ஊடகக்
கலையை இதுவரை முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஹராமா? ஹலாலா? என்ற அடிப்படைச் சட்டத்திற்குள்ளே சுத்திக் கொண்டிருக்கிறது. உருவப்படுத்துதல்
என்கிற ஒரு அம்சத்தை வைத்துக் கொண்டு இவையனைத்தையும் கையிலெடுக்காமல் சுருங்கிக் கிடப்பது
முஸ்லிம் சமூகத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி, “மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றும் தடைச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்; மத்திய மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு”. நீண்ட நாட்களாக மனித கழிவை மனிதனே அள்ளும் இழிவைப் பற்றி சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் தோழர் திவ்யா பாரதி அதைப் பற்றி ஆவணப்படம் எடுத்தார். இந்த ஆவணப்படம் தான் ஐகோர்ட்டை
உத்தரவிடச் செய்தது. இந்த ஆவணப்படம்தான் மத்திய மாநில அரசுகளைப் பார்த்து ஐகோர்ட்டை
கேள்வி கேட்கச் செய்தது.
“கக்கூஸ்” என்கிற ஆவணப்படத்தை கிட்டத்தட்ட
ஒரு வருடங்களாக பல்வேறு சிரமங்களை மேற்கொண்டு உருவாக்கினார் திவ்யா. அதை ஊர் முழுக்க
ஒளிபரப்பி காண்பித்தார். உடனே அந்த விஷயம் விவாதமாக்கப்படுகிறது. அந்த ஆவணப்படத்தை
யூ ட்யூபில் வெளியிட்டார். லட்சக்கணக்கானோர் அதை பார்த்தார்கள். அடுத்தக்கட்டமாக இயக்குனர்
பா.இரஞ்சித் தனது நீலம் ப்ரொடெக்ஷன் மூலம் “மஞ்சள்” எனும் நாடகத்தை அரங்கேற்றினார்.
அது இன்னும் விவாதமாக்கப்படுகிறது. பத்திரிகைகளும் ஊடகங்களும் அதைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
இது உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு செல்கிறது. பின்பு உத்தரவு வருகிறது. அந்த
உத்தரவின்படி இது முடிவுக்கு வந்துவிடும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அதற்கான முடிவுகளை
நோக்கி எட்ட முடிந்தது. இது ஆவணப்படம் என்ற கலையால் மட்டுமே சாத்தியமாயிற்று. தலித்களுக்கு
எவ்வளவு பிரச்னைகள் இருக்கிறதோ அதே அளவிற்கு சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கும் இருக்கிறது.
ஆனால் தலித்கள், பிரச்னைகளை மைய நீரோட்டத்திற்கு
கொண்டு வரும் அளவிற்கு முன் வந்திருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் சமூகம் இன்றும் கூட
அது சரியா? தவறா? என்ற விவாதத்திலேயே தேங்கிக் கிடக்கிறது.
ஒரு பிரச்னையை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் அது கலையால் மட்டுமே
சாத்தியம். பிற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் திராவிடம் வேரூன்றியிருப்பதற்கு
காரணம், இங்கு அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் முயற்சிகளைக் கொண்டு திராவிடம் கலை வாயிலாக மக்களிடம்
சென்றடைந்தது. வசனங்களாகவும், பாடல்களாவும் காட்சிகளாக்கப்பட்டு
மக்களிம் சென்றடைந்தது.
ஷரீஅத் சட்டங்களில் ஸ்திரமாக இருப்பதில் தவறில்லை. ஆனால் Òமகாஸிதுஷ் ஷரீஆÓ எனும் இந்த ஷரீஅத் சட்டங்களின் நோக்கங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உருவப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் சம்பந்தமாக வரும் சட்டங்கள் அனைத்தும்
இணைவைப்பை தவிர்ப்பதற்காகத்தான். ஆனால் ஊடகக் கலை மூலமாக ஒருவர் இணைவைத்துவிட்டார்
என்று எவராலும் சொல்லிவிட முடியாது. ஊடகக் கலை மூலமாக தகாத காட்சிகளை பார்க்க நேரிடுகிறது
என்றால் அது ஊடகக் கலை மீது தவறல்ல. அந்த படைப்பை உருவாக்கியவர் மீது தான் தவறு.
“தி மெஸேஜ்” திரைப்படத்தை பெரும்பான்மையான
முஸ்லிம்கள் பார்த்து ரசித்தோம். நாகூர் ஹனீபாவின் பாடல்கள் பல ஆண்டுகள் கழித்து இன்றும்
கூட நம் விசேஷங்களில் தனி இடத்தை பிடிக்கிறது. திருமண மண்டபம் என்றால், வாழ்க வாழ்கவே வாழ்கவே.. பாடல் இடம்பெற வேண்டும். பக்ரீத்
என்றால் “ஹஜ்ஜுப் பெருநாள் வந்த
சரித்திரம் கேளுங்கள்..” பாடல் வீட்டில் ஒலிக்க
வேண்டும். இப்படி நாகூர் ஹனீபாவின் பாடல்கள் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால்
நாகூர் ஹனீபாவிற்கு பிறகு யார்? அவர் பாணியிலேயே வந்த நௌஷாத், இறையன்பன் குத்தூஸ் போன்ற சிலர் இருந்தாலும் இன்றைய காலத்திற்கேற்ற
இசை வடிவில் முன்வரவில்லை. அதுமட்டுமல்ல ஆன்மீகம் சார்ந்த பாடல்களோடு சுருங்கிவிட்டார்கள்.
நாகூர் ஹனீபா பாடிய பாடல்கள் அந்த காலத்திற்கு தோதுவாக இருந்தது. அதே பாணி இன்றும்
தோதுவாக இருக்குமா? ஆனால் நாகூர் ஹனீபாவின்
பாடல்களை மட்டும் தான் இன்றுவரை வைத்து ஒப்பேற்றிக் கொள்கிறோம்.
குறிப்பிட்ட சிலர் இதையெல்லாம் புரிந்துகொண்டு விமர்சனங்களைக் கடந்து களத்தில்
சாதித்து வருகிறார்கள். இயக்குனர் தாமிரா மெஹர் குறும்படத்தை உருவாக்கினார். இன்னும்
அவரின் படைப்புகளனைத்திலும் அவருக்கு இருக்கும் சமூக அக்கறையை பார்க்க முடிகிறது. விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான ஆளூர் ஷாநவாஸ் பிறப்புரிமை, கைதியின் கதை, காயிதே மில்லத் போன்ற ஆவணப்படங்களை உருவாக்கினார். சமீபத்தில் அமீர் அப்பாஸ் கொடிக்கால்
ஷேக் அப்துல்லாஹ் பற்றிய ஆவணப்படத்தை உருவாக்கினார். இன்னும் இளையதலைமுறையை சேர்ந்த
பலரும் நல்ல கருத்தியலோடு ஊடகக் கலையை நோக்கி முன்வருகிறார்கள்.
மரியாதைக்குரிய தாவூத் மியாகான் அவர்கள் நுங்கம்பாக்கத்தில் Qiams ACademy என்று ஒரு ஊடகப் பாடசாலையை நம் சமுதாய
மக்களுக்காகவே தரமாக உருவாக்கியிருக்கிறார். இப்படி ஊடகக் கலையை நோக்கி முன்னேறி வருபவர்கள்
அதிகரித்துக் கொண்டேயிருந்தாலும் தொடர்ந்து அவர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டுக்
கொண்டேயிருக்கிறது. இயக்குனர் அமீர் இதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்: Òஅப்துல் கலாமை முஸ்லிம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
அடுத்து அந்தப் பட்டியலில் நாங்கள் இருக்கிறோம். எங்களை முஸ்லிம் இல்லை என்று சொல்கிறார்கள்Ó என்றார். மைய நீரோட்டத்தில் பயணிக்கும் முஸ்லிம்கள் அனைவர்
மீதும் விமர்சனம் வைக்கப்பட்டுக் கொண¢டேயிருக்கிறது.
ஆனால் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இதை சரியாக கையாண்டார்கள். பராசக்தி பட
விழாவில் கலந்துக் கொண்டு திரைப்படக் கலையின் தேவையை உணர்த்தினார். வடமாநிலங்களில்
உள்ளதைப் போன்று இங்கும் திரைப்படக் கல்லூரிகளை நிறுவ வேண்டும் என்றார்.
திரைப்படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்துகிறார்கள் என்று எல்லோரும்
குற்றம் சாட்டுகிறோம். ஆனால் முஸ்லிம்களை நல்லவர்களாக காட்சிப்படுத்த சமுத்திரக்கனி, சீனுராமசாமி, கே.வி.ஆனந்த் போன்ற இயக்குனர்கள் தான் முன்வந்தார்கள் தவிர நம் தரப்பிலிருந்து
யாரும் முன்வரவில்லை.
ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். உலக அளவில் தரமான சிறந்த திரைப்படங்களை வெளியிடும்
நாடுகளின் பட்டியலில் ஈரானுக்கு தனி இடமுண்டு. ஈரானில் 300 பெண் இயக்குனர்கள் இருக்கிறார்கள். அது பன்மைச் சமூகம் வாழக்கூடிய நாடல்ல; இஸ்லாமிய நாடு. இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றும் நாடு.
இன்னும் பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் ஊடகத்தைப் பற்றிய தெளிவு உண்டு. Òமகாஸிதுஷ் ஷரீஆÓ எனும் ஷரீஅத் சட்டங்களின் நோக்கங்களை மையமாகக் ஊடகக் கலையைப் பயன்படுத்தலாமா கூடாதா
என்பதில் ஒரு முடிவுக்கு வர முடியும் என நம்புகிறேன்

