அப்துர் ரஸ்ஸாக் பிலாலி
மனித வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் உலகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் தீர்மானிக்கின்ற அற்புத சக்திதான் அறிஞர்கள். அவர்களின் சிந்தனைகளும் கருத்துக்களும்தான் உலகை ஏதாவது ஒரு கோணத்தில் ஆட்கொண்டிருக்கும்.
சமுதாயத்தின் முதுகெழும்பு அறிஞர் பெருமக்கள்தான். அவர்களே அச்சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கு பொறுப்பு. அறிஞர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்றால் அறிஞர்களின் மரணம் அகிலத்தின் மரணம். அறிஞர்களின் மரணம் உலகமுடிவு நாளின் அடையாளம்.
அறிஞர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாததொரு இழப்பு என்று அறிஞர்களின் சிறப்பை இஸ்லாம் உணர்த்துகிறது.
ஒரு முறை அலெக்சாண்டர் தன்னுடைய ஆசிரியரான அரிஸ்டாட்டிலுடன் நீண்ட பயணத்தை மேற்கொண்டிருந்தார். பயணத்தின் இடையில் ஆற்றை கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதை உணர்ந்த மன்னர் அலெக்சன்டர் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்டாட்டிலை ஆற்றக்கரையை கடக்கவிடாமல் அலெக்சண்டர் தானே அக்கரைக்கு சென்று ஆற்றின் மேடுபள்ளங்களை அறிந்து கொண்டு திரும்பி வந்து தன்னுடைய ஆசிரியரான அரிஸ்டாட்டிலை அழைத்து சென்றார்.
அதிர்ச்சியுடன் அரிஸ்சாட்டில், மன்னர் அலெக்சாண்டரை பார்த்து “நீங்களே ஒரு நாட்டின், மன்னன் கரை கடக்கின்ற சமயத்தில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் என்னவாயிருக்கும்Ó என்றார். Òநான் இறந்திருந்தால் என்ன? என்னுடைய ஆசிரியரான நீங்கள் என்னைப் போன்று நூறு மன்னர்களை உருவாக்கியிருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால் நூற்றுக்கணக்கான மன்னர்களை இந்த உலகம் இழந்திருக்கும்Ó என்றார் அலெக்சண்டர்.
நூற்றுக்கணக்கான மன்னர்களையும், அறிஞர் பெருமக்களையும், எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும், விஞ்ஞானிகளையும், தருகின்ற ஓர் அற்புதமான ஆளுமைகளைகள் தான் ஆசிரியர்கள்.
ஆசிரியர் பணி அறப்பணி
அதற்கே உன்னை அர்ப்பணி
என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் தன் வாழ்வையே ஆசிரியர் பணியில் அர்ப்பணித்து பெருங்கொண்ட அறிஞர் பட்டாளத்தையே சமூகத்திற்கு வழங்கிச் சென்ற ஓர் அற்புத ஆளுமைதான் கண்ணியத்திற்குரிய மவ்லவி, அல்ஹாபிழ், அஃப்சலுல் உலமா, அல்ஹாஜ் முஹம்மது இல்யாஸ், ஃபாஜில் பாகவீ, தேவ்பந்தீ ஹள்ரத் அவர்கள்.
வழக்கமாக ஃபஜ்ருக்கு அடிக்க வேண்டிய கைப்பேசியின் அலாரங்கள் ஏப்ரல் 5ம் தேதி அன்று மட்டும் வழமைக்கு மாற்றமாக பாங்கை முந்திக் கொண்டு அடிக்கத் தொடங்கியது. ஃபஜ்ருக்கு அடிக்க வேண்டிய அலாரம் இப்பவே ஏன் அடிக்குது... செல்போன் ஏதாவது ரிப்பேரா? என அடுக்கடுக்கான கேள்விகளோடு அறை தூக்கத்தில் கைப்பேசி பார்த்தால், பதிவு (sணீஸ்மீ) செய்யாத நம்பரின் அழைப்பு யாராக இருக்கும் என்ற யோசனையில் தொடுதிரையை தொட்டுவிட்டு காதில் வைத்த ஆலிம்களுக்கு படபடத்தது.
என்னங்க ?????? சொல்கிறீங்க!!!!!! நம்ம இல்யாஸ் ஹள்ரத்தா! மனம் ஏற்றுக் கொள்ளாமல் திரும்பவும். ஏங்க திருப்பூர் இல்யாஸ் ஹழ்ரதா?????? என்று உறுதிப்படுத்தியவர்களுக்கு Òஆமாங்கÓ என்ற பதில் மீண்டும் அதிர்ச்சியை அதிகமாக்கியது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி என்ற வார்த்தையோடு படுக்கையை உதறினர் உலமாக்கள், காட்டுத்தீயை போல பரவிய செய்தியினால் ஆலிம்கள் ஆங்காங்கே தொலைபேசியில் அலவலாவிக் கொண்டார்கள். ரயில் எத்தனை மணிக்கு இருக்கு??? எத்தனை மணிக்கு திருப்பூர் போகும்? தாமதம் ஆகிடாதே, அல்லது காரிலே போயிடலாமா? பணத்தை பற்றி ஒன்னும் பிரச்சனையில்லை? கொஞ்சம் சீக்கிரம் என உலமாக்கள் பதிவில் உள்ள நம்பரைத் தேடிக் கொண்டும் பரபரப்புடன் காணப்பட்டார்கள்.
தொழுகைக்கு வந்த மஹல்லாவாசிகளில் ஒரு சிலர் நம்முடைய முஹல்லாவில் ஏதாவது மௌத்தா? என்று கேள்வியை வீசிவிட்டு ‘எங்களுடைய ஆசிரியர்’ என்று வந்த பதிலின் தாக்கத்தை உணராமல் கலைந்து சென்றார்கள்.
ஆம், அன்று காலை மறைந்த மார்க்க சூரியனின் தாக்கத்தை மக்கள் அவ்வளவாக உணர்ந்திருக்க வாய்ப்பில்லைதான். கதிரவன் கண்விழித்து தேடிய போது காணாமல் போன ஓர் அற்புத ஆளுமைதான். சங்கைக்குரிய மவ்லானா, அல்ஹாபிழ், அஃப்ஜலுல் உலமா அல்ஹாஜ் முஹம்மது இல்யாஸ் ஃபாஜில் பாகவீ ,ஃபாஜில் தேவ்பந்தீ ஹள்ரத் கிப்லா அவர்கள்.
திருப்பூரிலே கணக்கு பிள்ளையாக பணியாற்றி எளிமையாக வாழ்க்கையை நடத்தி வந்த ஹனீபா, சஃபியா ஆகிய தம்பதிகளுக்கு 1954 ஜுன் 12ஆம் தேதி இரண்டாவதாக பிறந்தவர்கள்தான் மவ்லான முஹம்மது இல்யாஸ் ஃபாஜில் பாகவி ஹள்ரத் (ரஹ்) அவர்கள். அவர்களுக்கு மூத்த அண்ணனும், தம்பி ஒருவரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். ஹள்ரத் அவர்கள் ஆரம்பமாக திருப்பூரில் உள்ள மக்தப் மதரஸா மிஃப்தாஹுல் ஹூதாவில் ஒதத் தொடங்கினார்கள்.
ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த ஹள்ரத் அவர்கள் அதன் பிறகு திருப்பூர் பெரிய பள்ளிவாசல் திண்ணையில் தொடங்கப்பட்ட அரபுக் கல்லூரியில் ஆலிம் கல்வியின் முதலாம் ஆண்டை நிறைவு செய்தார்கள்.
குர்ஆனின் மீது ஏற்பட்ட ஒரு அதீத ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய நண்பர். முஸ்தபா ஃபாஜீல் பாகவி (ஆசிரியர் உஸ்மானியா அரபிக் கல்லூரி, மேலப்பாளையம்) அவருடன் சேர்ந்து திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியிலே குர்ஆன் மனனப்பிரி(ஹிப்ளு)வில் சேர்ந்தார்கள்.
பாலக பருவம் என்பதால் ஹிப்ளைத் தொடர முடியாமல் தங்களுடைய ஊருக்கே இருவரும் திரும்பினார்கள்.
இறைவனின் பேருதவி:-
திருச்சியிலிருந்து திருப்பூர் வரவேண்டுமென்றால் கரூரை அடைந்து அங்கிருந்து தான் திருப்பூர் வர முடியும். மாலை நேரப்பயணம் என்பதால் கரூர் வந்தடைகின்றபோது இரவு வேளையாக இருந்ததால், அந்த இரவில் செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தபோது அழகான தொப்பி, அடர்ந்த தாடி, பிரகசமான முகத்துடன் அவர்கள் அருகிலே ஒருவர் வந்து அமர்ந்து விசாரித்து விட்டு நடத்துடனரிடம் இரவு இவர்களை உங்களுடைய டிப்போவிலே தங்க வைத்து நாளை திருப்பூருக்கு பஸ் ஏற்றிவிடுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார்கள். அதே போன்று டிப்போவிலே இரவு தங்கி அடுத்தநாள் காலை திருப்பூர் வந்தடைந்தார்கள்.
மீண்டும் படிப்பை தொடர மேட்டுப்பாளையத்தில் உள்ள ஃபைஜுல் பரக்காத் அரபுக் கல்லூரியில் இரண்டாம், மூன்றாம், நான்காம் ஜும்ராக்களை நிறைவு செய்தார்கள்.
(1) மவ்லானா உமர் ஃபாரூக் பாகவி (சைய்யது நிஜாமி ஷா நூரி நிறுவனர் மர்கஸசல் இஸ்லாஹ்),
(2) பன்னூலாசிரியர் மவ்லானா அப்துல்லாஹ் பாகவிஹழ்ரத். சித்தையன் கோட்டை, போன்ற பெரியோர்கள் இல்யாஸ் ஹள்ரத்தின் ஆரம்ப கால ஆசிரியர்கள்.
நான்கு ஆண்டுகள் நிறைவு செய்ததோடு இல்யாஸ் ஹள்ரத் அவர்கள் தமிழகத்தின் தாய்கல்லூரி வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிஹாத்தில் சேர்ந்தார்கள். பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஹள்ரத்துடைய தாயார் மர்ஹூமஹ் சஃபியா இறைவனடி (வஃபாத்) சோர்ந்தார்கள்.
அதன் பிறகு ஹள்ரத் அவர்களின் தந்தை பேரிஸில் உள்ள பூக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்கள். தந்தை சென்னை வந்துவிட்டதால் ஹள்ரத் மதரஸா விடுமுறை நாட்களிலே தங்குவதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் மண்ணடி சென்னையில் மஸ்ஜித் மஃமூரில் இயங்கி வந்த காஷிபுல் ஹுதா மத்ரஸாவில் தங்கிக் கொள்வார்கள்.
காஷிபுல் ஹூதா அரபுக் கல்லூரியின் நிறுவனர் மவ்லானா அப்துல் மஜீது பாகவி ஹள்ரத் அவர்கள் மர்ஹூம் இல்யாஸ் ஹஜ்ரத் அவர்களுக்கு பாக்கியாத்தில் நண்பராக இருந்தவர்கள். அதுவும் இல்யாஸ் ஹஜ்ரத் அவர்களுக்கு ஒரு ஆறுதலான விஷயமாக இருந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
அவர்கள் ஓதுகின்ற காலத்தில் தீனியாக பகல் உணவில் மிஞ்சும் கொண்டை கடலை, பயிறு போன்றவற்றை எடுத்து கழுவி வைத்து மாலை நேரங்களில் சாப்பிடுவார்கள்.
இறைவனின் பேரருளால் 1974 ஆம் (இளங்கலை பட்ட) பாகவி பட்டத்தை நிறைவு செய்தார்கள். அதன் பின் இரண்டு ஆண்டு காலம் பாக்கியத்துஸ் ஸாலிஹாத்திலே படித்து 1976ல் பாஜில் பாகவி பட்டத்தை நிறைவு செய்தார்கள். ஹதீஸ் கலையின் மீதான அதீத ஆர்வம் ஹள்ரத் அவர்களின் உள்ளத்தில் இருந்துக் கொண்டே இருந்ததன் விளைவாக தேவ்பந்தில் தவ்ரதுல் ஹதீஸ், தகஸ்ஸுஸ் ஃபில் ஹதீஸ் (முதுகலை படிப்பு) ஒரு வருடம் நிறைவு செய்து ஃபாஜில் தேவ்பந்தி என்ற பட்டதோடு திரும்பினார்கள்.
ஹள்ரத் அவர்கள் திருச்சி ஹிப்ளு (குர்ஆன் மனனப்பி ரிவில்) ஓதாமல் திரும்பியதிலிருந்து குர்ஆன் மனனம் செய்வதன் மீதான ஆர்வம் அபரிமிதமாக இருந்ததன் விளைவால் ஒவ்வொரு ஆண்டும் 3 ஜீஸ்உக்கள் (பாகங்கள்) வீதம் 10 ஆண்டுகளில் முழு குர்ஆனையும் மனனம் செய்து ஹாபிழ் ஆனார்கள்.
அதன் பிறகு தராவீஹ் தொழுகையை முதன் முறையாக இராம்நாடு, புதுமடத்திலே ரமளானில் தொழ வைத்தார்கள். அவ்வூரைச் சேர்ந்த ஷம்ஊன் ஹாஜியார் ஹள்ரத்தோடு நெருங்கி பழகினார்கள். அவர்களின் நன்னடத்தைகள் ஹள்ரத்துடைய உள்ளத்தில் ஆழ்ந்த தாக்கத்தை மதிப்பையும் உருவாக்கியது.
அவர்களை சங்கை செய்யும் விதமாக ஹள்ரத் அவர்கள் தன்னுடைய இரண்டாவது மகனுக்கு ஷம்ஊன் என்று பெயரிட்டார்கள்.
அதன் பிறகு முஸ்தபா ஹள்ரத் (உஸ்மானியா அரபிக் கல்லூரி) பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக் கல்லூரிக்கு ஆசிரியராக அழைக்க ஆசிரியர் பணியை ஏற்று தன்னுடைய சேவையை தொடங்கினார்கள்.
அங்கு ஆசிரியராக இருந்தபோதே ஈரோடு தாவூதிய்யாவின் முதல்வர் மர்ஹூம் மவ்லானா கி.ஷி சித்தீக் அலி பாகவி ஃபாஜில் தேவ்பந்தீ ஹள்ரத் மக்தூமியாவிற்கு சென்றிருந்தார்கள். பாட அட்டவணையில் (மஃகூலாத்தை சார்ந்த) தத்துவியல் துறைகளின் பாடங்களில் இல்யாஸ் ஹள்ரத் அவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது.
மஃகூலாத் துறையை பொறுத்தவரை அவ்வளவு எளிதாக எல்லோராலும் நடத்திவிட இயலாது. அது போன்றதுதான் வாரிசுரிமைச் சட்டம் (மீராஸ்), தர்க்ககலை (முனாழரஹ்) மன்திக் போன்ற கலைகளும்.இவைகளனைத்தையும் ஹஜ்ரத் அவர்களே நடத்தி வந்ததைக் கண்டார்கள்.
கிரேக்க தத்துவங்களை குறித்து அடிப்படை அறிவை பெற்றிருந்தால் தான் நடத்த முடியும், என்பதை சித்தீக் அலி ஹஜ்ரத் அவர்கள் அறிவார்கள் இல்யாஸ் ஹள்ரத்தின் திறமையை அறிந்த சித்தீக் அலி ஹள்ரத் கிப்லா அவர்கள் ஈரோடு தாவூதிய்யாவிற்கு ஆசிரியராக அழைத்தார்கள்.
ஹள்ரத்தின் அழைப்பை ஏற்று 1978 ஆண்டு தாவூத்திய்யா அரபுக் கல்லூரியின் ஆசிரியாராக பொறுப்போற்றார்கள். ஆசிரியராக பணியாற்றுகின்ற காலங்களில் மாணவர்களின் தவறுகளை சுட்டி காட்டி கண்டிப்பதற்குப் பதிலாக திறமைகளை பாராட்டி உற்சாகப்படுத்தி தீயவைகளை கலைவார்கள்.
தவறு செய்கின்ற மாணவர்களை கல்லூரியை விட்டு வெளியேற்ற நிர்வாகம் முயற்சித்தாலும், முடிந்தவரை மாணவனை நீக்கம் செய்யாமல் தக்க வைத்து ஒழுக்கம் போதிப்பார்கள்.
திறமையான மாணவர்களை ஆசிரியருக்கு நிகராக மதிக்கும் பாணி ஹள்ரத்துக்கே உரித்தான பாணி.
மர்ஹும் மவ்ளானா பீர் முஹம்மது ரஷாதி பள்ளபட்டி அவர்கள் தாவூதியாவில் ஆசிரியராக சேர்ந்தபோது அவர்களிடம் இல்யாஸ் ஹள்ரத் வான சாஸ்த்திரகலையில் (அஃப்லாக்), சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டார்கள்.
மவ்லானா பீர் முஹம்மது ரஷாதி ஹள்ரத் அவர்கள் இல்யாஸ் ஹள்ரத் அவர்களின் சிறந்த மாணவர்களில் ஒருவர். எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டு தன்னுடைய மாணவர்களிடத்திலே கல்வியை கற்று அறிஞர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தார்கள்.
சாதரணமாக தவறு நிகழ்ந்து அதை சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவம் உடையவர்கள்.
பாக்கியாத்தில் உஸ்தாதாக இருந்த பூவார் ஹனீப் ஹள்ரத் அவர்களின் கூற்று:- இல்யாஸ் பாகவி ஹள்ரத்துக்கு ஒரு பாடம் தெரியவில்லையென்றால் அதை அப்படியே விட்டுவிட்டு போகமாட்டார்கள். அதை தெரிந்து கொள்கின்றவரை அமைதியாகவும் இருக்க மாட்டார்கள் என்று கூறுவார்கள். இந்த பணிவும் ஆர்வமும்தான் ஹள்ரத் அவர்களைத் தேடி பல அறிஞர்களை வரவழைத்தது.
பல அரபிக் கல்லூரியின் ஆசிரியர்கள், முதல்வர்கள் தங்களுக்கு புரியாத ஒரு சில பாடங்களை கற்பதற்காக வெள்ளிக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் வருகிறபோது ஹள்ரத் அவர்கள் முழு நேரத்தையும் ஒதுக்கி ஓதி கொடுப்பார்கள்.
சமயபுரம் திருச்சி இன்ஆமுல் உலூம் அரபிக் கல்லூரியின் முதல்வர் சக்கி மங்கலம் அபுல் ஹஸன் ஹஜ்ரத் அவர்கள் ஈரோட்டில் இல்யாஸ் ஹள்ரத் அவர்களிடத்திலே தங்கி பல நாட்கள் பாடம் படித்திருக்கிறார்கள்.
எல்லோரிடமும் அன்பாகவும், கண்ணியத்துடனும் நடந்து கொள்வார்கள். மன்னிக்கும் மனப்பான்மை ஹள்ரத் அவர்களுக்கு மிகவும் அதிகம்.
ஒரு முறை தாவூதிய்யாவில் மாணவர்கள் தொழுகைக்கான வருகையை கவனிக்கும் பொறுப்பு தரப்பட்டிருந்தது. ஹள்ரத் அறைகளை கவனித்துக் கொண்டே வரும்போது ஒரு இலங்கை மாணவர் அறையிலேயே தங்கி இருந்தார். அம்மாணவனை தொழுகைக்கு போகும்படி ஹள்ரத் அவர்கள் அறிவுறுத்த அம்மாணவன் கடும் கோபத்துடன் Òடேய் கண்ணாடி போகிறாயா? இல்லை கண்ணாடியை உடைக்கவா?Ó என்று திட்டினார்
இந்நிகழ்வை முதல்வராகிய சித்தீக் அலி பாகவி (ரஹ்) அவர்களிடம் தகவலை மட்டும் கூறிவிட்டு நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம். என்று அறிவுறுத்தினார்கள்.
அதன் பின் ஐந்தாண்டுகளுக்கு பிறகு அந்த இலங்கை மாணவன் எகிப்து அஸ்கர் பல்கலைகழத்தில் இருந்து முதல்வர் சித்தீக் அலி ஹள்ரத் அவர்களுக்கு போன் செய்து. “உஸ்தாத் நான் மேற்படிப்புக்காக அஸ்கர் பல்கலை கழகம் வந்திருக்கின்றேன். எல்லா தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன். இருந்தபோதும் என்னை சேர்க்க மறுக்கிறார்கள். நன்னடத்தை சான்று கேட்கிறார்கள். இல்யாஸ் ஹள்ரத் அவர்களை மன்னிக்க சொல்லுங்கள்” என்றார். முதல்வர், இல்யாஸ் ஹள்ரத் அவர்களிடத்தில் தெரிவித்த கணமே அம்மாணவனை மன்னித்து நன்ன
டத்தை சான்று அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தார்கள்.
மாணவர்களை பழிவாங்கவே, தனிப்பட்ட கோபமோ கொள்ள மாட்டார்கள். பணிபுரிகின்ற இடங்களில் நிர்வாகிகளுடைய அன்பையும், மக்களின் அன்பையும் முழுவதுமாக பெற்று திகழ்ந்தார்கள்.
தமிழகத்தின் பள்ளிவாசல்களில் ஓரிரு ஆண்டுகள் முஸல்லாவில் (தொழுக வைக்கும் இடத்தில்) காலம் தள்ளுவது என்பது ஆலிம்களின் அற்புதம்.
ஆனால் இல்யாஸ் ஹள்ரத் 25 ஆண்டுகளாக கிட்டதட்ட கால் நூற்றாண்டுகளாக ஈரோடு அசோகபுரம் பள்ளிவாசலில் தராவீஹ் தொழ வைத்தார்கள். 7 ஆண்டுகள் இமாமத்தும் நடத்தினார்கள். அங்கே ஏற்பட்ட அத்துனை பிரச்சனைகளையும் ஹள்ரத் கையாண்ட விதங்கள் இன்னும் அலாதியானதாகும்.
அசோகபுரம் பள்ளிவாசலில் ஹள்ரத்தை விட முஅத்தினுக்கு சம்பளம், போனஸ் போன்றவற்றில் அதிகம் கொடுக்கப்பட்டதை அறிந்த ஒரு சில ஹஜ்ரத்தின் நண்பர்கள், இது என்ன அநியாயமாக இருக்கிறது என்று பேச ஆரம்பித்தார்கள்.
“இதை கேள்விப்பட்ட ஹள்ரத் அவர்கள் இதில் என்ன அநியாயம் இருக்கிறது? அல்லாஹ் எனக்கு நாடியதை கொடுக்கத் தான் போகிறான். மோதினாருக்கும் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர் கேட்கிறார் நிர்வாகம் கொடுக்கிறது. இதில் என்ன எனக்கு கண்ணியக்குறைவு இருக்கிறது. அவரின் தேவையைத்தான் கேட்கிறார். தாரளமாக தரட்டும். நாமும் சேர்ந்து அவருக்கு உதவுவோம்Ó என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
உலமாக்களில் மனிதாபிமானத்திற்கு நல்ல முன் மாதிரி எவர் என்றால் அது நமது இல்யாஸ் ஹஜ்ரத் தான் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.
மூட்டு வலியின் காரணமாக தொடர்ந்து தொழ வைக்க முடியவில்லை. என்றாலும்கூட ரமளானில் தராவீஹ் தொழுகைக்கு பாடம் பார்ப்பது போல் பாடம் பார்த்து மாணவர்களிடத்திலே ஓதிகாட்டுவர்கள்.
மரணம்வரை குர்ஆனை தனது உள்ளத்திலே ஏந்தி இருந்தார்கள். எதை செய்தாலும் மனத்தூய்மையோடு இறைவனுக்காக செய்கின்றபோது தான் அதில்வெற்றி என்பதை பல்வேறு இடங்களில் குறிப்பிடுவார்கள்.
இந்த மனத்தூய்மை தான் பாக்கியாத்தின் ஆசிரியர் பணிக்கு அழைக்கப்பட்ட காரணமாயிருந்தது. 1989ஆம் ஆண்டு பாக்கியாத் ஸாலிஹாத்தில் ஆசிரியர் பணியை ஏற்கவேண்டும் என்று கடிதம் அனுப்பட்டதை தொடர்ந்து தாவூதியாவின் ஆசிரியர் பணியை நிறைவு செய்தார்கள். 10 ஆண்டு கால ஆசிரியர் பணியில் மாணவர்களை கர்ஜித்து பேசாமல், உள்ளத்தில் அக்கறையோடும் கோபமான முகப்பாவனையோடு மட்டும் அதட்டி நேர்வழிப்படுத்தினார்கள். ஹள்ரத் அதட்டல் தண்ணிரிலே விழுந்த பூவைப் போன்று மென்மையாக இருக்கும்.
1989 ஆம் ஆண்டு பாக்கியத்தில் கால்பதிந்தபோது இறைவன் அவர்களுக்கு ஹஜ்ஜுடைய பாக்கியாத்தை வழங்கினான். தனது மனைவி காமிலா அவர்களுடன் மூன்று மாதகால ஹஜ் பயணத்தை கப்பலின் மூலம் மேற்கொண்டிருந்தார்கள். இந்த புனித பயணத்திலே கணவன் மனைவி இருவமே உடன் இருந்த அத்தனை நபர்களின் நன்மதிப்பையும் பெற்றார்கள். ஹஜ்ஜுடைய பாக்கியத்தை பெற்று பாக்கியாத்தின் ஆசிரியர் பணியை தொடர்ந்தார்கள். வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் பணியாற்று
கின்ற காலகட்டங்களில் சக ஆசிரியர்களின் அன்பையும், மாணவர்களின் நேசத்தை பிரியத்தையும், பெற்றிருந்தார்கள். பாக்கியத் சேவைகளில் சில..
பாக்கியத்தில் வருட வருட கத்ரு சபக்(நிர்ணயித்த பாடத்திட்டத்தின் அளவு)கை முடிக்கின்ற ஆசிரியர்
களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். அந்த ஊக்கத்தொகையை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ஹள்ரத் பெறுவார்கள். எந்த ஒரு பாடத்தை மாணவர்களுக்கு புரியவைக்காமல் இருக்கமாட்டார்கள். நிறைந்த கருத்தை குறைவான வார்த்தைகளில் சொல்வார்கள்.
பேசுவோர்களிடத்தில் மனதளவில் நெருக்கத்தையும் தொடர்புகளில் தூரத்தையும் கடைபிடிப்பார்கள். தன்னுடைய தேவையை இறைவனிடத்திலே மட்டும் கேட்டுப் பெறும் ஒரு அழகான குணம் கொண்டவர்கள்.
திருப்பூரிலிருந்து பணியன்களை வாங்கி எளிய மாணவர்களுக்கு ஒரு சில ரூபாய்களை மட்டும் ஒப்புக்காக வாங்கிக் கொண்டு விற்பனை செய்வார்கள்.
இல்யாஸ் ஹள்ரத் என்ற அறிவுக்கடலில் மூழ்கிய ஒரு சில முத்துக்களில் ஒரு சிலர்...
சேலம் அபூதாஹிர் பாகவி ஹள்ரத் கிப்லா
(பேராசிரியர் : நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி)
நாடறிந்த பேச்சாளர் ஹள்ரத் கல்வித்தரத்தில் சிறந்தவர்கள் எந்த ஒரு பாடத்தையும் எளிதாக புரிய ஆற்றல் படைத்தவர்கள். மூன்று எழுத்துள்ள வினைச்சொல், நான்கு எழுத்துள்ள விளைச்சொல் (சுலசியுல் முஜர்ர்த், ரூபாயியுல் முஜர்ரத்) என்பதற்கு உதாரணமாக தி.மு.க அ.தி.மு.க என்பார்கள் எங்களுக்கு சொன்னவுடனே புரிந்துவிட்டது.. இது போன்ற ஏரளமான உதாரணங்களை சொல்வார்கள். திறமையற்ற மாணவன் கூட ஹள்ரத்தின் பாடங்களை புரிந்து பிறருக்கு பாடம் நடத்துகின்ற அளவுக்கு திறமையாக மாறிவிடுவார்கள்.
ஒரு அறிஞனுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்புகளில் ஒன்று யாரையும் மன்னிக்கும் மனப்பாண்மை. எவ்வளவு பெரிய தீங்கு செய்திருந்தாலும் பெரியதாக கருதாமல் “போங்க பாய் போங்க எல்லாம் சரியாகிவிடும்” என்ற வார்த்தை இன்றைக்கும் என்னுடைய காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
நமது நிருபர் :
அபூதாஹிர் பாகவி ஹள்ரத்திடம் பயானுக்கு தேதி வாங்குவதற்கு சிலோன், சிங்கப்பூர், மலேசியா, குவைத் என கண்டங்களிலே தொடங்கி ஆண்டிப்
பட்டி, அரசம்பட்டி என கிராமங்கள்வரை காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட தங்களுடைய ஆசிரியரை பற்றி தகவலை அளித்தது இல்யாஸ் ஹள்ரத்தின் மீது கொண்டிருந்த கண்ணியத்தையும் மரியாதையும் வெளிப்படுத்துகிறது.
முஹம்மது இப்ராஹிம் ஃபாஜில் பாகவி
(அன்வாருல்லாஹ் ஷா நூரி)
ஸ்தாபகர் ஜாமிஆ அன்வரிய்யா குட்டிகாட்டூர்
பாக்கியத்தில் ஃபாஜில் பாகவி பட்டம் பெறும் பாக்கியத்தை பெற்றவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஓதுகின்ற காலங்களில் ஹள்ரத் அவர்களிடம் பாடம் இல்லையென்றாலும் தனிப்பட்ட முறையில் இருவரும் நட்புடன் இருந்தோம். ஹள்ரத் அவர்களுக்கு கேரளாவிலிருந்து புத்தகங்களை வாங்கி கொடுப்பேன். அப்போது கொடுக்கல் வாங்கலில் மிகவும் பேணிக்கையாக இருப்பார்கள். உடல் நிலை சரியில்லாத நேரத்தில் கூட என்னிடம் பிஸ்கேட்டும், தேனும் கொடுத்து சாப்பிட்டுவிட்டு தாருங்கள் என பரக்கத் தேடியபோது வெளிப்பட்ட பணிவு இன்றும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
தங்களுடைய பிள்ளைகளை ஓத வைக்கவில்லையென்றாலும்கூட நல்லொழுக்கம் மிகுந்தவர்களாக உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய இறுதி ஜனாஸாவின் கலந்து கொள்ளும் வாய்பை பெற்றது மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
மௌலானா, மஸ்தான் பாகவி
தலைமை இமாம், மஸ்ஜிதே ரஹ்மானிய்யா சேலம்
பேராசிரியர் சுல்தானியா பெண்கள் அரபிக்கல்லூரி
நாங்கள் இல்யாஸ் ஹள்ரத் அவர்களிடம் ஃபிக்ஹ் (மார்க்கசட்டம்) ஹிதாயா புத்தகத்தை படித்தோம். பொதுவாக “ஹிதாயா“ பாடத்தை எடுப்பதற்கு தர்க்க கலை (ஜீலீவீறீsஜீலீஹ்) குறித்து ஆழ்ந்த ஞானம் உடையவர்களால் மட்டுமே நடத்த முடியும். அப்படி ஹள்ரத் “ஹிதாயா” நடத்துகின்றபோது செய்முறை வகுப்பாக (றிக்ஷீணீநீtவீநீணீறீ சிறீணீss) எடுப்பார்கள். ஜனா
ஸாவின் சட்டம் நடத்துகின்றபோது கஃபன் முறையை ஒரு மாணவனை படுக்கவைத்து செய்து காட்டினார்கள். ஹஜ்ஜுலே தொங்கோட்டம் ஓட வேண்டும் என்ற சட்டம் வந்தபோது எழுந்து நின்று ஓடி காட்டினார்கள்.
பாடம் வாசிக்க என்னை கட்டளையிட்ட கணமே வாசிக்க தொடங்கினேன். அறிவாளி! நிறுத்துங்கள், பாடம் பார்த்துவிட்டு வாசியுங்கள் என்று கூறியது இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. என்னை அறிவாளியாக மதித்து அறிவாளியாகவே உருவாக்கிய ஆசிரியர் பெருந்தகை இல்யாஸ் பாகவி ஹள்ரத் அவர்கள் இழப்பு இந்த சமுதாயத்திற்கு ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய இழப்பாகும்.
அல்ஹாபிழ், முஹம்மது சுல்தான் பாகவி,
பேராசிரியர் ஜாமிஆ ஆன்வாரிய்யா, கேரளா.
இல்யாஸ் ஹள்ரத் அனைவருக்கும் புரிகின்ற வகையில் எளிமையாக பாடம் நடத்துவார்கள். ஒவ்வொரு முறை பாடம் நடத்துகின்ற போதும் குறிப்புகள் எடுத்துக் கொண்டு தான் வருவார்கள். பாடம் நடத்தி முடித்தவுடன் அந்த குறிப்புகளை கிழித்து விடுவார்கள். காரணம் மறுமுறை பாடம் நடத்தும் போது சோம்பலே தோய்வே ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார்கள்.
தொழுகையில் ஒரு போதும் போடுபோக்காக இருக்கவே மாட்டார்கள். ஐந்து வேளை தொழுகையும் பள்ளிக்கு சென்று சுன்னத் தொழுகையோடு சேர்த்துதான் ஃபர்ளையும் நிறைவேற்றுவார்கள். ஹள்ரத் அவர்களின் மரணம் ஈடு செய்யமுடியாத இழப்பு.
அல்ஹாஃபில், அல்முக்ரிஉ க்ஷி.ஷி. முஹம்மது காசிம் பாகவி, ஃபாஜில்.தேவ்பந்தீ, (சக்கிமங்கலம் மதுரை ஹள்ரத் கிப்லா, முதல்வர் ஜாமிஆ ரவ்ளத்துஸ் ஸாலிஹாத்துல் பனாத்,புத்தாநத்தம் திருச்சி
இல்யாஸ் ஹள்ரத் அவர்களின் மாணவர் இல்யாஸ் ஹள்ரத் அவர்கள் தாவூதியாவில் பணியாற்றும் காலம் முதல் மரணிக்கும் ஓரிரு நாட்கள் முன்பு அரை காதிமாக (பணிவிடையாளனாக) இருந்திருக்கிறேன். ஹள்ரத் அவர்கள் அசோகபுரத்தில் இமாமாக இருந்தபோது ஹள்ரத்தின் விடுப்பு நாட்களில் இமாமாகவும் பணிபுரிந்திருக்கிறேன். ஹள்ரத் தொழ வைத்த நாட்களை கணக்கிட்டு வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை கொடுப்பார்கள். நான் உறுதியாக மறுக்கவே அறிய கலைகளை புது புது கிதாபுகளை ஓதி கொடுப்பார்கள்.
நான் ஹள்ரத் அவர்களுக்கு செய்த பணிவிடைகளை மறுமையின் சேமிப்பாக கருதி டீ, துணி, அயன் செய்வது, போன்றவற்றிற்கு ஒருபோதும் பணத்தை பெற்றுக் கொள்ளமாட்டேன். இல்யாஸ் ஹள்ரத்தின் மரணம் என் தந்தையின் மரணம் என்று சொல்லி முடித்து கண்ணீரைக் கொண்டு முற்றுபுள்ளி வைத்ததை என்னுடைய பேனா பதிவு செய்ய மறக்கவில்லை.
நமது நிருபர்:
எந்த ஒரு நவீன கேமராவும் இல்யாஸ் ஹள்ரத்தை இந்த அளவுக்கும் படம் பிடித்து காட்டிருக்க முடியாது வர்ணித்திருக்கவும் முடியாது. இங்கு தரப்பட்ட தகவல் 95% சக்கிமங்களம் காசிம் ஹள்ரத் கிப்லா அவர்களிடம் இருந்து பெறப்பட்டதே.. காசிம் ஹள்ரத்தின் ஒவ்வொரு அசைவுகளும் இல்யாஸ் ஹள்ரத்தின் நினைவுகள் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தது.
மௌலானா, முஸ்தபா ஃபாஜீல் பாகவி
பேராசிரியர் உஸ்மானிய அரபிக்கல்லூரி
நானும் இல்யாஸ் பாகவியும் மக்தப் முதல் ஆலிம் ஃபாஜீல் வரை ஒன்றாக படித்து பட்டம் பெற்றவர்கள். என்னுடைய நண்பர் கடுமையாக முயற்சி செய்யக் கூடியவர். தனியாக குர்ஆன் மனைம் செய்தவர். என்னோடு போட்டிபோட்டு எப்போதும் முதல் மாணவராகத் தான் இருப்பார்கள்.
நைனார் முஹம்மது பாகவி,
பேராசிரியர் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி
எல்லோரிடமும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் பழகுவார்கள். அதனால் மாணவர்கள் ஹள்ரத் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பார்கள். ஒரு சில நேரங்கள் ஆசிரியர்கள் கத்ரு சபக்கை (நிர்ணயிக்கப்பட்ட பாட அளவுவை) முடிப்பதற்காக கூடுதலாக பட்ட நேரங்களை எடுத்துக் கொள்கின்றபோது மாணவர்கள் பாடங்களை கவனிப்பதற்கு சோர்வடைவார்கள். ஆனால் இல்யாஸ் ஹள்ரத்யின் பாடத்தில் மட்டும் மிகுந்த உற்சாகத்தோடு காணப்படுவார்கள். காரணம் மாணவர்களை சோர்வடைய விடாமல், நிகழ்வுகள், அனுபவங்கள், நகைச்சுவைகள் என ஒவ்வொரு நொடியும் அர்த்தமுள்ளதாக மாற்றிவிடுவார்கள். அவர்களின் மறுமை வாழ்வை இறைவன் பொருந்தி கொள்வானாக..
அப்துஸ் ஸமது பாகவி,
ரஹ்மத் பதிப்பகம்,
நான் பாக்கியாத்தில் ஓதும் காலங்களில் இல்யாஸ் ஹள்ரத்வுடன் நெருங்கிய தொடர்பில் இல்லை. ரஹ்மத் பதிப்பகம் அபூதாவூத் மொழிபெயர்க்கும் பணியை ஹள்ரத் அவர்களிடத்தில் ஒப்படைத்
திருந்தது. அதை தட்டச்சு செய்யும் பணியை மேற்கொண்டிருந்தபோது ஹள்ரத் என்னுடைய வீட்டிற்கே வருகை தந்து உணவு சாப்பிட்டுவிட்டு என்னுடைய மனைவியிடம் பரக்கத் பொருந்திய சில
ரூபாய்களை கொடுத்தபோது மனைவி அதை மறுத்தார்கள். உடனே ஹள்ரத் அவர்கள், Òஉன்னுடைய அத்தா (தந்தை) நான். கொடுத்தால் வாங்க வேண்டும்Ó என்று அன்பாக அதட்டி சென்றது என் உள்ளத்தில் ஆழமாக பதிந்தது. அபூதாவூத் புத்தகத்தை பார்க்கின்ற பொழுதெல்லாம் அதட்டலும் ஹள்ரத் அவர்களின் குழந்தை முகமும் தான் கண் முன்னே தோன்றுகிறது.
முஸ்தபா
அறங்காவலர், ரஹ்மத் பதிப்பகம்.
இல்யாஸ் ஹள்ரத்தின் மரணம் என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. என்னிடம் கடைசியாக போன் பேசியபோது இரண்டு பாகங்களை நிறைவு செய்துவிட்டேன். மூன்றாவது பாகத்தை தொடர போவதாக தெரிவித்திருந்தார்கள். ஹள்ரத் அவர்கள் மனிதர்களையும் தாண்டி எந்த ஒரு உயிருக்கும் தீமை செய்யாத அன்பான மனிதர்.
புதிய பணியாளர்கள் அபூதாவூத்தை தட்டச்சு செய்யும்போது அதிகமான தவறுகள் ஏற்பட்டது. இதை ஹள்ரத் அந்த பணியாளருக்கு புரியும்படி எளிய முறையில் அறிவுறுத்தினார்கள். ஹதீஸ் மீது ஹள்ரத் அவர்களுக்கு அளவுக்கதிகமாக ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் என்னிடம் அபூதாவூத் மொழிபெயர்ப்பதாக விருப்பம் தெரிவித்தார்கள். நானும் அதை ஏற்றுக் கொண்டு இரண்டு பாகங்கள்வரை மொழிபெயர்ப்புகள் முடிந்து பணிதோய்வில்லாமல் சென்று கொண்டிருந்த நேரத்தில் ஹள்ரத்தின் மரணம் என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது.
இது போன்று ஹள்ரத் உருவாக்கிய நூற்றுக்கணக்கான அறிஞர்களும் நண்பர்களும் தான் அவர்களின் சேவைக்கு சான்று. இது மட்டுமல்லாது 2006 முதல் 2010 வரை தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் உறுப்பினராக பணியாற்றினார்கள். 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்கள்.
திருவண்ணாமலை ஜமாஅத்துல் உலமா துணைத் தலைவராக பணியாற்றினார்கள். மஜ்லிசுல் மதாரிஸ் (மத்ரஸாக்களின் கூட்டமைப்பிலே) உறுப்பினராகவும், துணை செயலாளராகவும் பணியாற்றினார்கள்.
பொதுவாக திருப்பூர் பள்ளிவாசல் நிர்வாகத்தில் உறுப்பினராக ஆலிம் ஒருவரை தேர்வு செய்வார்கள். ஆனால் இந்த இல்யாஸ் ஹள்ரத் அவர்க
ளுக்கு துணைத்தலைவர் பதவி கொடுத்து கௌரவித்தார்கள்.
திருப்பூர் தலைமை காஜீயாகவும் ஹள்ரத் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இந்த தருணத்தில் தான் ஹள்ரத் அவர்கள் காஜீ பணியை மேற்கொண்டு, ஆசிரியருடைய பணியையும் மேற்கொள்வது கடினமாக இருக்கிறது. எனவே ஆசிரியர் பணியை நிறைவு செய்துவிட்டு முழுவதுமாக மக்கள்சேவை பணியில் முழுவதுமாக ஈடுபாடு ஆசைப்படுகிறேன். என பாக்கியாத்தின் முதல்வர் உஸ்மான் சாஹ்பிடம் தெரிவித்தார்கள்.
ஹள்ரத் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் துறைகளை இடையில் யாரும் நடத்தமாட்டார்கள். நீங்கள் பரிபூரணப்படுத்தி இந்த ஆண்டோடு நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதன் பிறகு ஹள்ரத் அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது என்று விடுமுறை எடுத்துள்ளார்கள் எப்போதும் விடுப்பு எடுக்காத ஹள்ரத் திடீரென விடுப்பு எடுத்ததால் சக ஆசிரியர்கள் போன்செய்து விசாரித்தபோது காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது ஒரீரு தினங்களில் வந்துவிடுவேன் என்று கூறியுள்ளார்கள். ஹள்ரத் காய்ச்சல் மிகவும் கடுமையானதால் ஏப்ரல் 5 ஆம் தேதி அதிகாலை சுமார் 2:30 மணியளவில் மறுஉலக பயணத்தை மேற்கொண்டார்கள். வாழ்வின் ஓவ்வொரு கட்டத்திலும் நபிவழியை பின்பற்றிய ஹள்ரத் மரணிக்கும்போது அவர்களின் வயது 63. அல்லாஹ் அவர்களை ஏற்று சுவனத்தை நல்குவானாக.


